Thursday, November 11, 2004

கலைத்தாய்க்கு கோலிவுட் எடுத்த நன்றி விழா!

நமது தமிழ்த் திரையுலகத்தினர் தாங்கள் அ.இ.அ.தி.மு.க பிரமுகர்களுக்கு எவ்விதத்திலும் சளைத்தவர்கள் இல்லை என்பதை இந்த நன்றி கூறல் விழாவின் மூலம் மிக அற்புதமாக நிரூபித்துக் காட்டியுள்ளனர்! விழாவில் பேசிய ஒவ்வொருவரும் 'அம்மா'வுக்குச் சூட்டிய புகழாரத்தின் விளைவு, அதை டிவியில் பார்த்த எனக்கே சீதளத்தால் (ஐஸ் மழையைக் கண்டதால்!) காது குத்தல் வந்து விட்டது! பேசிய அனைவரும், விழா மேடையை ஒரு நாடக மேடையாக்கி அமர்க்களமாக நடித்துத் தள்ளி விட்டார்கள்!

மனோரமா போன்ற, பல படங்களில் சிறப்பாக நடித்துள்ள ஒரு மூத்த நடிகை ஏன் இவ்வாறு முதல்வரை 'பொறுமையில் பூமாதேவி, தங்கத்தாரகை, வீரப்பன் என்னும் நரகாசுரனை வதம் செய்த அன்னை சத்தியபாமா' என்றெல்லாம் (டிவியில் பார்ப்பவர்களுக்கு இந்த முகஸ்துதி எவ்வளவு கிண்டலாகவும் அபத்தமாகவும் இருக்கும் என்பதை உணராமல்!) புகழ்ந்து தள்ளினார் என்பது அவருக்கே வெளிச்சம். சங்கப்புலவர் போல் 'அம்மா' மேல் ஒரு பாடலும் இயற்றிப் பாடினார். அவருக்கு அப்படி புகழ வேண்டிய கட்டாயம் இருப்பின், சொல்ல வேண்டியதை ஒரு கேஸட்டாகப் போட்டால் கட்சிக்காரர்களுக்கு உபயோகமாக இருக்கும்!

இயக்குனர் சிகரம் பேசும்போது, திரைப்படத்துறையின் ஏதோ ஒரு கோரிக்கையை 'அம்மா'வின் பொற்பாதங்களில் சமர்ப்பித்தார்!?! ராதாரவி 'அம்மா'வை தெய்வம் என்று கூறியதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ரஜினி பேசியதைப் பற்றி (நாம்) பேசாமல் இருப்பது நலம்! விழாவில் பேசியவர்களில் கமல்ஹாசன் ஒருவர் தான் சற்று நேர்மையாகப் பேசினார். தமிழ்த் திரையுலகில் பலருக்கு நடுநிலை என்பதே கிடையாது. சமயத்திற்கேற்றபடி பல்டி அடிப்பதில் வல்லவர்கள்.

நமது முதல்வர் திருட்டு விசிடியை ஒழிக்க எடுத்த நடவடிக்கைகள் மூலம் கலையுலகிற்கு பெரிய நன்மை செய்துள்ளார் என்பதை மனமார ஒப்புக் கொண்டாலும் கூட இந்த விழாவில் நடந்தது தனி மனித வழிபாட்டின் உச்சம் என்றே கூற வேண்டும். பத்ரி கூறியது போல் சில நேரங்களில் நாம் ஜனநாயக நாட்டில் தான் வாழ்கிறோமா என்ற சந்தேகம் எழுகிறது. எனக்கென்னவோ நம் முதல்வர் இவ்வாறு தன்னை பொது மேடைகளில் அளவுக்கு மிக அதிகமாக (எதையோ ஒன்றை எதிர்பார்த்துக் கொண்டு!) புகழ்வதை தடை செய்தல் அவசியம் என்று (முதல்வரின் நலம் விரும்பி என்ற முறையில்) நினைக்கத் தோன்றுகிறது.

என்றென்றும் அன்புடன்
பாலா

4 மறுமொழிகள்:

Kasi Arumugam said...

//எனக்கென்னவோ நம் முதல்வர் இவ்வாறு தன்னை பொது மேடைகளில் அளவுக்கு மிக அதிகமாக (எதையோ ஒன்றை எதிர்பார்த்துக் கொண்டு!) புகழ்வதை தடை செய்தல் அவசியம் என்று (முதல்வரின் நலம் விரும்பி என்ற முறையில்) நினைக்கத் தோன்றுகிறது.//
இந்த மாதிரிஎத்தனை பேர் கிளம்பியிருக்கிறீர்கள், உங்களுக்கு வரப்போகிறது தடை:-)

enRenRum-anbudan.BALA said...

"நண்பர்கள் சொல்லும் நம் நல்ல குணங்களைவிட எதிரிகள் சொல்லும் நம் கெட்ட குணங்கள் உண்மையாக இருக்கக் கூடும்!"

சத்தியமான வார்த்தைகள், மூர்த்தி! இதை உணர்ந்து செயல்படுபவர்கள் குறைவே!

said...

Yes, Rajiniyai pattri nengal pesathathey Nalam.

You should stand in Rajini's shoes to know his situation. When Rajini do something there are more people in this world to give some comments as if they are so great, I beleive you are also in such a category. Thanks for not writing any bad comments.

You cannot find a better person than him, he wants to be good to all thats why everybody is irritating him.

Rajini Paratukum Vimarsanathukum Apparpattavar.

Valndalum Yesum Thalndalum Yesum.

JaiHind

Annamalai (Not Anonyous no time to register here)
Rajini Rasigan

enRenRum-anbudan.BALA said...

ரஜினி ரசிகரே,
நானும் பல வருடங்களாக ரஜினியின் பரம ரசிகன் தான். ஆனால், அவர் செயல்பாட்டில் தவறு இருந்தால், அதைச் சுட்டிக் காட்டலாம் அல்லவா? அன்று அவர் சற்று ஓவராக புகழ் பாடினார் என்று தோன்றியது. மற்றவர் (விவேக்,சேகர்) செய்தால் பரவாயில்லை. இவர் லெவலுக்கு அப்படிச் செய்தால் மதிப்பிழந்து விடுவார். அதே போல், முன்பொரு முறை அவர் திமுக பக்கம் அதிகம் சாய்ந்ததும் அனாவசியம் என்பது என் கருத்து. அதாவது, அவர் தனித்து அரசியலில் ஈடுபட்டு மக்களுக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்பதே என் ஆசை.

என்றென்றும் அன்புடன்
பாலா

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails